முருங்கை வளர்ப்பு செய்ய வழிவகைகள் மிக எளிதாகிவிட்டது. பல விவசாயிகளும் இயற்கை முறை முருங்கை விவசாயம் செய்து வருகின்றனர். முருங்கை மரத்தின் இலை, பூ, காய்கள் எல்லாமே மருத்துவ குணங்கள் மிகுந்தது. இதில் தாது உப்பு சத்துக்கள், சுண்ணாம்பு சத்துக்கள், வைட்டமின்கள் மற்றும் இரும்பு சத்துக்கள், புரோட்டீன், பொட்டாசியம், போன்ற பல்வேறு சத்துக்கள் இருக்கிறது.
முருங்கையில் நாட்டு முருங்கை மற்றும் செடிமுருங்கை என இரு வகைகள் இருக்கிறது. முருங்கையில் சுவையும், மருத்துவக் குணமும் அதிகமாக இருக்கும். செடிமுருங்கையின் ஆயுள்காலம் இரு ஆண்டுகள் வரை. நாட்டு முருங்கையின் ஆயுள்காலம் ஐம்பது ஆண்டுகள் வரை. செடிமுருங்கை மூலம் நாற்றுகள் உற்பத்தி செய்து வளர்க்கலாம், நாட்டுமுருங்கை விதை மூலமாகவும், போத்துக்கள் மூலம் பதியம் போட்டும் வளர்க்கலாம். முருங்கைக்கு ஜூன் மாதம் முருங்கை பட்டம் மாதம் ஆகும்.
மாடித் தோட்டத்திலேயே செடி முருங்கை வளர்ப்பது எப்படி , ஆரம்பத்திலிருந்து அறுவடை வரை என்ன செய்ய வேண்டும், மண் கலவை தயாரித்தல், உரங்கள் வைக்கும் முறை, பூச்சி தாக்குதல் கட்டுப்பாடு மற்றும் பராமரிப்பு, அதிகம் அறுவடை எடுக்க என்ன செய்யவேண்டும், முருங்கை வளர்ப்பு சிறந்தது ஏன் ? என்பதைப் பற்றி இக்கட்டுரையில் பார்க்கலாம்.
மாடித்தோட்டத்தில் செடி முருங்கை வளர்ப்பு
மாடித்தோட்டத்தில் செடி முருங்கையை வளர்ப்பு செய்ய ஐம்பது லிட்டர் கேன் வசதியாக இருக்கும். வளர்ப்பு பைகளில் வளர்க்க வளர்ப்பு பை 2 X 2 இருக்குமாறு தேர்வு செய்வது நல்லது. மண் கலவை பொறுத்தவரையில் மணல் கலந்த, செம்மண்ணில் நன்றாக வளரும். உங்களிடம் செம்மண் இல்லையென்றாலும், தோட்டத்தின் மண் பயன்படுத்தலாம். இரண்டு பங்கு மண், ஒரு பங்கு மண்புழு உரம், ஒரு மடங்கு வேப்பம் புண்ணாக்கு, எடுத்துக்கொண்டு, இவை எல்லாம் நன்றாக கலந்து ஒன்பது நாட்கள் ஈரத்தன்மையோடு வைத்திருக்கவும். அப்பொழுது தான் நுண்ணுயிர்கள் அனைத்தும் வளர்ந்து செடி வளர்வதற்கு ஏற்ற சூழலை உருவாக்கும். ஒன்பது நாட்களுக்குப்பிறகு விதை விதைக்கலாம்.
![]() |
இப்போதே வாங்குங்கள்!! 5 கிலோ ஸ்பெஷல் தேங்காய் நார் கழிவு கட்டிகள்உங்கள் மாடித்தோட்டத்தின் எடையை குறைத்து, செடிகளை ஈரமாக வைத்திருக்கும் தேங்காய் நார் கழிவு கட்டிகள். மிக குறைந்த விலையில்! |
செடிமுருங்கையை விதைத்தபின் ஒன்பதிலிருந்து பன்னிரண்டு நாட்களில் முளைத்து வர தொடங்கும். செடிமுருங்கையை விதைத்து 30 நாட்களில் ஒரு அடிக்கும் மேலாக வளர்ந்திருக்கும். அப்போது உயிர் உரங்கள், மண்புழு உரத்தை மண் கலவைதனில் சேர்க்கவும். செடி முருங்கை விதைத்து 40 – இல் இருந்து 50 நாட்களில் மூன்று அடி வரை வளர்ந்துவிடும். அச்சமயத்தில் நுனியை கிள்ளி விடவும். இவ்வாறு செய்வதன் மூலம் பக்கக் கிளைகள் நிறைய வளர்ந்து, கீரை அதிகமாக கிடைக்கும். இவ்வேளையில் செடி முருங்கையின் வேருக்கு அருகில் பெருங்காயத்தை புதைக்கவும். இதனால், பெருங்காயச்சாறு செடியின் வேர்த்தண்டு முழுதும் பரவுவதால், கம்பளி பூச்சி தாக்குதலில் இருந்து செடி முருங்கையை எளிதாக பாதுகாக்கலாம். விதைத்த 180 நாட்களில் செடி முருங்கையானது காய்க்கத்தொடங்கும். ஆறு மாதங்கள் வரை காய்ப்பு இருக்கும்.
காவாத்து செய்தல்
நடவு முதல் கவாத்து வரை பராமரிப்பு அவசியம். முருங்கை வளர்ப்பு முறை தனில் முருங்கை காய்த்து முடித்தபிறகு கவாத்து செய்தல் முக்கியமாகும். அப்போது தான் பக்கக் கிளைகள் மிகுந்து, எல்லா கிளைதனிலும் காய்க்க தொடங்கும். கவாத்து செய்தபிறகு கண்டிப்பாக இயற்கை உரங்கள் இடுவது அவசியம். இதனால் மீண்டும் நிறைய காய் காய்ப்பதற்கு உதவியாக இருக்கும்.
பூச்சி தாக்குதல் மற்றும் பராமரிப்பு
செடி முருங்கையில் முதலில் தோன்றுவது இலைப்பேன், இவற்றை நீரை பீச்சி அடித்தால் கீழே உதிர்ந்து விடும். அடுத்ததாக, பிணைப்பு புழு உங்களது மரத்தில் இலைகள் ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கொண்டு இலைகள் வெண்மை தன்மையாக இருக்கும், அந்த இலைகளின் நடுவில் புழுக்கள் காணப்படும், இதுவே இலை பிணைப்பு புழு ஆகும். இதற்கு வேப்ப எண்ணெய் (அ) பூண்டு மிளகாய் கரைசல் தெளித்தாலே போதுமானது. அடுத்ததாக மொட்டுதனை சேதம் செய்யும் மொட்டுப் புழு தாக்குதல் வரும், இது மொட்டுக்கள் தோன்றும்பொழுதே அதிகம் துளைத்து அதிலுள்ள சத்துக்களை எடுத்து உயிர்வாழும். இதனால் காய்களே தோன்றாமலே போய்விடும். இவற்றிற்கு பெருங்காயத்தை நீரில் கலந்து தெளிக்கலாம். இம்முறைகளை பின்பற்றினால் செடி முருங்கை சாகுபடி நன்றாக இருக்கும்.
![]() |
இப்போதே வாங்குங்கள்!! 5 லிட்டர் ஸ்பெஷல் தெளிப்பான்உங்கள் செடிகளின் மேல் தண்ணீர், பூச்சி விரட்டிகள் மற்றும் திரவ உரங்கள் தெளிக்க தரமான தெளிப்பான். மிக குறைந்த விலையில்! |
முருங்கை பயன்கள்
- முருங்கைக் கீரையில் வைட்டமின் ஏ, பி, சி சத்துக்களும், சுண்ணாம்புச்சத்து, இரும்பு, கால்சியம், மெக்னீஷியம் போன்ற சத்துக்களும் இருக்கின்றன.
- முருங்கை கீரையுடைய பொடியானது மூளையின் செயல்பாட்டிற்கு உதவுகின்றது. மேலும் மன நலம், நியாபக சக்தி ஆகியவற்றைப் மேம்படுத்துகிறது.
- முருங்கைக்காய் வயிற்றுப் புண், கண் சம்பந்தமான நோய்களுக்கு மருந்தாக செயல்படுகிறது.
- முருங்கைக்காய் உடலுக்கு சிறந்த வலுவைக் கொடுக்க வல்லது.
- வாரத்தில் குறைந்தது இரு முறை முருங்கைக்காயை உணவாக உண்டால் ரத்தமும், சிறுநீரும் சுத்தமடையும்.
முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போக மாட்டான் என்றொரு பழமொழி உண்டு எனும் நம் முன்னோர்களின் வாக்கிற்கு ஏற்ப முருங்கையை நட்டு அதன் பயன்களை முழுமையாக பெற்றவர்கள் வயதான பின்பும் கோலூன்றி நடக்கத் தேவை இருக்காது, ஏனென்றால் அவ்வளவு அளப்பரிய சத்துக்கள் முருங்கையில் இருக்கிறது. முருங்கை மரம் வளர்ப்பது எப்படி என்று தெரிந்து கொண்டோம் . நீங்களும் முருங்கையை வளர்த்து அதன் பயன்கள் முழுமையாக பெற வாழ்த்துகிறோம்.